பும்ரா இடம் காலி.. ஒரே வாரத்தில் கதையை முடித்த நடராஜன்!
நடராஜன் ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே கொடுத்து மிரட்டி இருந்தார். ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 96 யார்க்கர் வீசி இருந்தார் நடராஜன்.

இதுவரை இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் என்றால் அனைவரும் சொல்லும் பெயராக இருந்தது பும்ரா தான். அவரது சிறப்பே யார்க்கர் தான். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பும்ராவை யார்க்கர் கிங்காக புகழ்ந்து வந்தது.
அந்த இடத்தை ஒரே வாரத்தில் அடைந்து, பும்ராவை யார்க்கர் கிங் என்ற பதவியில் இருந்து கீழே இறக்கி இருக்கிறார் நடராஜன். அது குறித்த புள்ளி விவரம் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
யார்க்கர் வகை பந்துவீச்சு கடினமானதாகும். உலகில் அனைத்து வேகப் பந்துவீச்சாளர்களும் ஸ்விங் பந்துவீச்சை தான் பெரிதாக கருதி வந்தனர். ஆனால், யார்க்கரை மட்டுமே வைத்து பேட்ஸ்மேன்களை பெரிதாக திணற வைக்க முடியும் என முதல் ஆளாக நிரூபித்தார் பும்ரா.
அவர் அதிக யார்க்கர்களை வீசுவார். அவரை யார்க்கர் கிங் என்றே பலரும் அழைக்கத் துவங்கினர். அதன் பின் பல வேகப் பந்துவீச்சாளர்களும் அதிக யார்க்கர்களை வீசத் துவங்கினர். குறிப்பாக, டி20 போட்டிகளில் கடைசி ஓவர்களில் யார்க்கர் முக்கிய இடத்தை பிடித்தது.
எத்தனை பேர் யார்க்கர் வீசினாலும் யாராலும் பும்ராவை நெருங்கக் கூட முடியவில்லை. இந்த நிலையில், தான் 2020 ஐபிஎல் தொடரில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் யார்க்கர்களாக வீசத் துவங்கினார். முதல் சில போட்டிகளிலேயே கவனம் ஈர்த்தார் நடராஜன்.
ஆனால், அப்போது அவர் மீது "யார்க்கர் மட்டுமே தெரியும்" என்பது போன்ற பரிதாப நிலை தான் இருந்தது. ஆனால், அதை வைத்தே ரன்களை கட்டுப்படுத்தி நம்பிக்கைக்குரிய வேகப் பந்துவீச்சாளராக வலம் வந்தார். ஏபி டிவில்லியர்ஸ் போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேனை தன் யார்க்கரில் வீழ்த்தினார்.
அடுத்து இந்திய அணியில் இடம் பெற்ற அவர், வெறும் யார்க்கரை வைத்து எப்படி சர்வதேச அரங்கில் சமாளிக்கப் போகிறார் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், தான் பங்கேற்ற மூன்றே போட்டிகளில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, தன்னைப் பற்றி பேச வைத்துள்ளார்.
அவர் கடைசியாக ஆடிய இரண்டு டி20 போட்டிகளில் எத்தனை யார்க்கர் வீசி உள்ளார் என்ற புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. முதல் டி20 போட்டியில் தான் வீசிய 24 பந்துகளில் 9 யார்க்கர் வீசி உள்ளார். இதில் லோ ஃபுல் டாஸும் அடக்கம். அந்தப் போட்டியில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
அடுத்து இரண்டாவது டி20 போட்டியில் அவர் எட்டு யார்க்கர் வீசினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் இரு அணிகளை சேர்ந்த அனைத்து பந்துவீச்சாளர்களும் ஒரு பந்துக்கு ஒரு ரன்னை விட கூடுதலாக விட்டுக் கொடுத்து இருந்தனர்.
ஆனால், நடராஜன் ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே கொடுத்து மிரட்டி இருந்தார். ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 96 யார்க்கர் வீசி இருந்தார் நடராஜன். பும்ரா 48 யார்க்கர் மட்டுமே வீசி இருந்தார். அப்போதே யார்க்கர் கிங் பட்டத்துக்கு தகுதியானவராக நடராஜன் மாறி இருந்தார்.
தற்போது சர்வதேச அரங்கிலும் தன் யார்க்கர்களால் சாதித்து வரும் அவர் பும்ராவை வீழ்த்தி யார்க்கர் கிங் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இனி வரும் போட்டிகளில் அவர் பும்ராவுடன் சேர்ந்து யார்க்கர் மழை பொழிவதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.