ஒரு முடிவோடத்தான் இருக்காங்க... சிட்னியில வெற்றிக்கு அதிக சான்ஸ் இருக்கு... கெய்ல் உறுதி

கடந்த மெல்போர்ன் போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் ரஹானே தலைமையிலான இந்திய அணி சிறப்பான உத்வேகத்தில் உள்ளதாக மேற்கிந்திய தீவுகளின் வீரர் கிறிஸ் கெய்ல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒரு முடிவோடத்தான் இருக்காங்க... சிட்னியில வெற்றிக்கு அதிக சான்ஸ் இருக்கு... கெய்ல் உறுதி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. 

இதையடுத்து வரும் 7ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்காக சிட்னிக்கு இரு அணிகளும் தங்களது பயணத்தை மேற்கொண்டன. இதையடுத்து அங்கு பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் கடந்த மெல்போர்ன் போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் ரஹானே தலைமையிலான இந்திய அணி சிறப்பான உத்வேகத்தில் உள்ளதாக மேற்கிந்திய தீவுகளின் வீரர் கிறிஸ் கெய்ல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விராட் கோலி, முகமது ஷமி மற்றும் ரோகித் சர்மா இல்லாமல் இளம் வீரர்கள் மற்றும் சில மூத்த வீரர்களே இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள கெய்ல், சிட்னியில் நடைபெறவுள்ள 3வது போட்டியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் தொடர்ந்து ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள கெய்ல், இந்த தொடரில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்கள் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வருவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அணி எப்போதும் வலிமையான கூட்டணியை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கேப்டன் விராட் கோலியின் இடத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள கெய்ல், ஆயினும் அவர் இல்லாமல் கடந்த போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இதுவே இந்திய அணியின் மிகப்பெரிய பலம் என்றும் அவர் கூறியுள்ளார்.