2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு

பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 928 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டில் அவர் மொத்தம் 274 நாட்கள் ‘நம்பர் ஒன்’ சிம்மாசனத்தை அலங்கரித்துள்ளார். 

 2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு

மெல்போர்னில் நடந்த ‘பாக்சிங் டே’ டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 247 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை துவம்சம் செய்தது. செஞ்சூரியனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 இதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இது தான் இந்த ஆண்டின் கடைசி தரவரிசை பட்டியல் ஆகும்.

இதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 928 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டில் அவர் மொத்தம் 274 நாட்கள் ‘நம்பர் ஒன்’ சிம்மாசனத்தை அலங்கரித்துள்ளார். 

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 911 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார். முன்னதாக சுமித் இந்த ஆண்டில் 91 நாட்கள் முதலிடத்தில் இருந்திருக்கிறார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மாற்றமின்றி 3-வது இடம் வகிக்கிறார். 

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பியதால் (9, 0) தரவரிசையில் 42 புள்ளிகளை பறிகொடுத்துள்ளார். இதே டெஸ்டில் 63, 19 ரன் வீதம் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் மேலும் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும்.

ஆண்டின் தொடக்கத்தில் 110-வது இடத்தில் இருந்த லபுஸ்சேன் இந்த ஆண்டில் மட்டும் 3 சதம், 7 அரைசதம் உள்பட மொத்தம் 1,104 ரன்கள் குவித்ததன் விளைவாக வியக்கத்தக்க ஏற்றம் கண்டிருக்கிறார். 

அவரது முன்னேற்றத்தால் 4-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் புஜாரா 5-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 95, 34 ரன்கள் வீதம் எடுத்து ஆட்டநாயகனாக ஜொலித்த தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 8 இடங்கள் உயர்ந்து டாப்-10 இடத்திற்குள் நுழைந்து, 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார். ‘பாக்சிங் டே’ டெஸ்டில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அள்ளிய அவர் தரவரிசையில் 4 புள்ளிகள் கூடுதலாக பெற்று மறுபடியும் 900 புள்ளிகளை தாண்டியிருக்கிறார். 2019-ம் ஆண்டில் அவர் மொத்தம் 322 நாட்கள் முதலிடத்தில் இருந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் மொத்தம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் ஒரு இடம் அதிகரித்து 2-வது இடத்தை எட்டியுள்ளார். இதனால் 2-வது இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். செஞ்சூரியன் டெஸ்டில் 4 விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க பவுலர் வெரோன் பிலாண்டர் 8-ல் இருந்து 5-வது இடத்துக்கு வந்துள்ளார்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முறையே வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் (473 புள்ளி), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (406 புள்ளி), இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (377), தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டர் (348), இந்தியாவின் அஸ்வின் (308) உள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்தியா 360 புள்ளிகளுடன் கம்பீரமாக பயணிக்கிறது. ஆஸ்திரேலியா 256 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான், இலங்கை தலா 80 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. நியூசிலாந்து 60 புள்ளியுடன் 5-வது இடத்திலும், இங்கிலாந்து 56 புள்ளியுடன் 6-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 30 புள்ளியுடன் 7-வது இடத்திலும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை.