அரை இறுதிக்குள் நுழைந்தது கொழும்பு

கண்டி டஸ்கர்ஸ் அணி 19.2 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. குவிட்ஸ் அஹமட், அஸான் பிரியஞ்சன், சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அரை இறுதிக்குள் நுழைந்தது கொழும்பு

எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் கண்டி அணியை தோற்கடித்து அரை இறுதிக்கான வாய்ப்பை கொழும்பு கிங்ஸ் அணி மிக இலகுவாக அடைந்துள்ளது.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா, குசல் மென்டிஸ், பிரென்டன் டெய்லர், அசேல குணரத்ன ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்கள்.

தனி ஒருவராகப் போராடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரஹ்மதுல்லாஹா கர்பாஸ் 34 ஓட்டங்களையும், இர்பான் பதான் 18 ஓட்டங்களையும், தில்ருவன் பெரேரா 12 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் மூவர் மாத்திரமே 10 க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றார்.

கண்டி டஸ்கர்ஸ் அணி 19.2 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. குவிட்ஸ் அஹமட், அஸான் பிரியஞ்சன், சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலகுவான இலக்கான 106 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய கொழும்பு கிங்ஸ் அணியின் டினேஸ் சந்திமால் 35 ஓட்டங்களையும், அஸான் பிரியஞ்சன் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

லூவிஸ் இவன்ஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், பெல் ட்ரன்மன்ட் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனிடையே கண்டி அணி வீரர்கள் 29 ஓட்டங்களை உதிரிகளாக விட்டுக்கொடுத்து வெற்றியை தாரைவார்த்தனர்.

அந்த உதிரி ஓட்டங்களில் 16 வைட்களும், ஒரு நோபோலும் வீசப்பட்டன.கொழும்பு கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றியை தனதாக்கியதோடு, அரை இறுதிக்குள் செல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொண்டது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0