ரோஹித் சர்மாவுக்கு சிக்கல் இல்லை... அறிவிப்பால் ரசிகர்கள் நிம்மதி

சிட்னியில் தற்போது கொவிட் 19 தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அங்கு போட்டி நடத்தப்படுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. போட்டி பெரும்பாலும் மெல்போர்ன் அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஹித் சர்மாவுக்கு சிக்கல் இல்லை... அறிவிப்பால் ரசிகர்கள் நிம்மதி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா சிட்னியில் சுயதனிமைப்படுத்தலில் இருக்கின்றமை எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே இந்தியா சார்பாக களமிறங்கவுள்ளார்.

உபாதை காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச இருபது 20 தொடரை இழந்த ரோஹித் சர்மாவுக்கு கடந்த 14 ஆம் திகதி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய கிரிக்கெட் சபை வழங்கியது.

இதனையடுத்து அவர் கடந்த 16 ஆம் திகதி இந்தியாவிலிருந்து சிட்னிக்கு பயணமாகி தற்போது சுயதனிமைப்படுத்தலில் இருக்கின்றார். மூன்றாவது டெஸ்ட் போட்டியை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி சிட்னியில் ஆரம்பிக்க ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், சிட்னியில் தற்போது கொவிட் 19 தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அங்கு போட்டி நடத்தப்படுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. போட்டி பெரும்பாலும் மெல்போர்ன் அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டாலும் ரோஹித் சர்மா இந்திய அணியுடன் இணைந்துகொள்வதில் பிரச்சினை இருக்காது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிட்னியில் அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தலில் இருப்பதால் தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததும் ரோஹித் சர்மாவுக்கு இந்திய அணியுடன் இணைய சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணித்தலைவர் விராத் கோஹ்லியும் இல்லை என்பதால் ரோஹித் சர்மாவின் வருகை இந்திய அணி வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.