எல்.பி.எல் சாம்பியன் கிண்ணம் யாருக்கு?

யாழ்ப்பாணத்து இளம் வீரர்கள் நால்வர் இடம்பெற்றுள்ள போதிலும் அவர்களுக்கு இறுதிப் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. வனிந்து ஹசரங்க ஜப்னா அணியின் நம்பிக்கைக்குரிய வீரராவார்.

எல்.பி.எல் சாம்பியன் கிண்ணம் யாருக்கு?

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக குஷிப்படுத்திக் கொண்டிருந்த எல்.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடர் நிறைவை எட்டியுள்ளது.

தொடரில் சாம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் புதன்கிழமை இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை சகலதுறை வீரரான திசர பெரேராவும், காலி கிளாடியேட்டர்ஸ் அணியை இளம் துடுப்பாட்ட நட்சத்திரமான பானுக ராஜபக்ஸவும் வழிநடத்துகின்றனர்.

ஜப்னா அணியில் பாகிஸ்தானின் சொஹைப் மாலிக், மேற்கிந்தியத் தீவுகளின் ஜொன்சன் சாள்ஸ், இலங்கையின் திசர பெரோ, தனஞ்சய டி சில்வா, சுரங்க லக்மால், வனிந்து ஹசரங்க, அவஸ்க பெர்னாண்டோ உள்ளிட்ட சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் போட்டியை தனியாக வெற்றிகொள்ளும் திறமை படைத்தவர்கள்.

இவர்களுடன் யாழ்ப்பாணத்து இளம் வீரர்கள் நால்வர் இடம்பெற்றுள்ள போதிலும் அவர்களுக்கு இறுதிப் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. வனிந்து ஹசரங்க ஜப்னா அணியின் நம்பிக்கைக்குரிய வீரராவார்.

இவ்விரண்டு அணிகளுக்கிடையில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் ஜப்னா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. அதற்கு முன்பு நவம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற முதல் போட்டியிலும் ஜப்னா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

அந்த வகையில் அந்த இரண்டு தோல்விகளையும் ஈடுசெய்யும் வகையில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மறுபக்கம் பானுக ராஜபக்ச, தனுஸ்க குணதிலக நம்பிக்கைக்குறிய வீரராக இருக்கிறார். பந்துவீச்சில் சாதிக்க மொஹமட் அமீர் காத்திருக்கிறார். தற்போதைய நிலையில் சற்று பலம் குன்றியதாகவே காலி அணி உள்ளது.

ஜப்னா அணி அதிர்ஷ்டம் மிக்கதாகவே தென்படுகின்றது. அவர்கள் லீக் சுற்றில் முதல் 4 போட்டிகளையும் வென்றார்கள். ஆனால், காலி கிளாடியேட்டர்ஸ் அணியோ லீக் சுற்றில் ஆரம்பத்தில் அடுத்தடுத்து தோல்வியடைந்து அதன் பிறகு வெற்றிகளை ஈட்டி இறுதிப் போட்டியை உறுதிசெய்துகொண்டது.

இதனால் இறுதிப் போட்டியில் வெற்றிபெறப் போவது யாரென்பதை கணிக்க முடியாமல் உள்ளது. என்றாலும் போட்டி இறுதிவரை விறுவிறுப்பாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0