சென்னையில் விளையாட முடியாமல் போனது கஷ்டமாக உள்ளது... நடராஜன் வருத்தம்
ஆஸ்திரேலிய தொடரில் நெட் பவுலராக பிளைட் ஏறி, செட் பவுலராக வந்திறங்கியிருக்கும் நடராஜன் ஏற்படுத்திய தாக்கங்களை அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.
இத்தனை மாதங்கள் அணியுடன் இணைந்து விளையாடிவிட்டு, சென்னை டெஸ்ட்டில் இல்லாமல் போனது கஷ்டமாக இருக்கிறது என்று வேதனைத் தெரிவித்துள்ளார் நடராஜன்.
ஆஸ்திரேலிய தொடரில் நெட் பவுலராக பிளைட் ஏறி, செட் பவுலராக வந்திறங்கியிருக்கும் நடராஜன் ஏற்படுத்திய தாக்கங்களை அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.
அதுவும் எடுத்த எடுப்பில் ஆஸ்திரேலியா போன்ற பிட்ச்களில் அவர் தனது திறமையை நிரூபித்து இருப்பது 'ராஜா.. நட ராஜா...' ரகம்.
இந்நிலையில், நடராஜன் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், இந்திய அணி உடனான தனது பயணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது
இந்திய அணியுடன் இல்லாதது எனக்கு கஷ்டமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக அணியுடனே பயணித்தேன். இப்போது அவர்களுடன் இல்லாதது கடினமாக இருக்கிறது.
ஆனால் கடந்த ஆறு மாதங்களாக குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாததால், இந்த ஓய்வு எனக்கு அவசியமாகிறது, அதனை நான் புரிந்துக்கொண்டேன். ஆனால் சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் இல்லாதது நிச்சயம் வருத்தம்தான்.
மேலும் நான் கிரி்க்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாடவே விரும்புகிறேன். இது எனக்கு எப்போதும் பிரஷராக இருந்ததில்லை. அதற்கு ஏற்றார்போல என்னை தயார் செய்துகொள்வேன்.
லாக்டவுன் காலத்தில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டேன். அதுதான் என்னை ஐபிஎல், ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாட வழிவகுத்தது.
பயிற்சியாளர்கள் அனைவரும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தனர். அணிக்கு புதிதாக வந்திருக்கிறேன் என்ற உணர்வே ஏற்படவில்லை. அனைவருடனும் சகஜமாக இருந்தேன். பயிற்சியாளர் பாரத் அருணிடம் நிறைய உரையாடியதால் எனக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை.
அவருடன் சுதந்திரமாக சந்தேகங்களைக் கேட்க முடிந்தது. ஒரு குறிப்பிட்ட சூழலில் எப்படி வீசுவது என்று சொல்லித் தருவார், அல்லது திறம்பட எப்படி வீசுவது, தாக்கம் எப்படி ஏற்படுத்துவது என்பதை அவரிடம் தெரிந்து கொண்டேன்.
3 வடிவங்களிலும் ஆட வேண்டும் என்றால் என் உடற்தகுதி கச்சிதமாக இருக்க வேண்டும், அதைத்தான் அவர்களும் என்னிடம் வலியுறுத்தி உள்ளனர்" என்றார்.