அதிகாரி போட்ட ஒற்றை ட்வீட்.. ஓடி வந்து உதவிய மேக்ஸ்வெல்.. என்ன மனுஷன்யா!
ஆட்டத்தில் சிக்ஸர் மழை பொழிந்த க்ளென் மேக்ஸ்வெல், பெண்களுக்கான அமைப்புக்கு செய்துள்ள உதவி வரவேற்பை பெற்றுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக சிக்ஸர் மழை பொழிந்த ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், தான் பந்தால் அடித்து உடைத்த இருக்கையை வைத்து செய்துள்ள விஷயம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா மோதிய 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆட்டத்தில் சிக்ஸர் மழை பொழிந்த க்ளென் மேக்ஸ்வெல், பெண்களுக்கான அமைப்புக்கு செய்துள்ள உதவி வரவேற்பை பெற்றுள்ளது.
ஐபிஎல் டி20தொடரில் ஆர்சிபி அணியால் ரூ.14.25 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸி.வீரர் மேக்ஸ்வெல் நியூஸிலாந்துக்கு எதிரான கடந்த இரு டி20 போட்டிகளிலும் பேட்டி்ங்கில் சொதப்பி விமர்சனத்துக்கு ஆளாகினார். இதனால் ஆர்.சி.பி அணிக்கு ஃபார்மில் இல்லாத ஒரு வீரர் வந்துள்ளார் என இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், இந்தப் போட்டியில் அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் 31 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர் அடங்கும். பவுண்டரி, சிக்ஸர் மூலம் மட்டும் 62 ரன்களை மேக்ஸ்வெல் சேர்த்தார், வெறும் 8 ரன்கள் மட்டுமே மேக்ஸ்வெல் ஓடி எடுத்துள்ளார்.
ஆட்டத்தின் 17வது ஓவரை ஜிம்மி நீஷம் வீசினார். இந்த ஓவரில் மட்டும் மேக்ஸ்வெல் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் அடித்தார். அவர் அடித்த முதல் சிக்ஸில் பந்தானது ரசிகர்கள் அமரும் ப்ளாஸ்டிக் இருக்கையை துளையிட்டது.
அதனை புகைப்படம் எடுத்த அந்த மைதானத்தின் அதிகாரி ஒருவர், பெண்கள் அமைப்புக்கு உதவ இந்த இருக்கையை ஏலம் விடப்போகிறேன், மேக்ஸ்வெல் ஆட்டோகிராஃப் இதில் கிடைக்குமா என ட்வீட் செய்திருந்தார்.
அவரின் ட்வீட் இணையத்தில் வைரலாக, அதனை பார்த்த மேக்ஸ்வெல் சற்றும் தாமதிக்காமல் அந்த இருக்கையில் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்துள்ளார்.
உடைந்த இருக்கையுடன் மேக்ஸ்வெல் நிற்கும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. பெண்களுக்கான அமைப்புகளுக்கு உதவ மேக்ஸ்வெல் செய்த விஷயம் பாராட்டை பெற்று வருகிறது.