இந்த விஷயத்தில் கில்லாடி.. கோலியின் செல்லப் பிள்ளையான தமிழக வீரர்!

முக்கியமாக பெங்களூர் அணிக்கு பவர்பிளே ஓவர்களில் வாஷிங்க்டன் சுந்தர் ரன்களை கட்டுப்படுத்துவதில் கை கொடுத்து வருகிறார்.

இந்த விஷயத்தில் கில்லாடி.. கோலியின் செல்லப் பிள்ளையான தமிழக வீரர்!

விராட் கோலியின் செல்லப் பிள்ளையாக மாறி உள்ளார் தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக அவர் மாறி உள்ளார். 

அவர் விக்கெட் எடுக்காவிட்டாலும் கூட அவரை நம்பி பவர்பிளேவில் அவரை பந்து வீச வைத்து வருகிறார் கோலி. அதற்கு காரணம், சுந்தரின் மற்றொரு திறமை தான். 

பெங்களூர் அணி கடந்த இரண்டு சீசன்களில் பிளே-ஆஃப் செல்ல முடியாமல் மோசமாக அடி வாங்கியது. ஆனால், இந்த சீசனில் அந்த அணி அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு போட்டி போட்டு வருகிறது. 

பெங்களூர் அணிக்கு கடந்த சீசன்களில் பந்துவீச்சு கை கொடுக்கவில்லை. ஆனால், இந்த சீசனில் அந்த அணி திறமையான பந்துவீச்சாளர்களை அடையாளம் கண்டு பயன்படுத்தி வருகிறது. அவர்களில் தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ளார். 

முக்கியமாக பெங்களூர் அணிக்கு பவர்பிளே ஓவர்களில் வாஷிங்க்டன் சுந்தர் ரன்களை கட்டுப்படுத்துவதில் கை கொடுத்து வருகிறார். பொதுவாக டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், சுந்தர் சுழற் பந்துவீச்சாளர் என்றாலும் மற்ற ஓவர்களை விட பவர்பிளே ஓவர்களில் தான் சிறப்பாக பந்து வீசி வருகிறார். 

வாஷிங்கடன் சுந்தரை முற்றிலும் நம்பி பவர்பிளே ஓவர்களை அவரிடம் கொடுத்து வீச வைக்கிறார் கேப்டன் விராட் கோலி. இந்த விஷயத்தில் கோலியின் செல்லப் பிள்ளையாகவே மாறி இருக்கிறார் இளம் வீரர் சுந்தர். அவர் மிகக் குறைவான எகானமி வைத்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் பந்துவீசி 4.80 மட்டுமே எகானமி வைத்துள்ளார்.

ஆனால், அவரிடம் ஒரு குறை உள்ளது. அவர் ஐந்து போட்டிகளில் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார். விக்கெட் வீழ்த்தாவிட்டாலும்கூட எதிரணியை ரன் கொடுக்காமல் அழுத்தத்தில் சிக்க வைப்பதால் கோலி இவரை முக்கிய பந்துவீச்சாளராக பயன்படுத்தி வருகிறார். பெங்களூர் அணியில் மத்திய ஓவர்களில் விக்கெட் வீழ்த்த மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் சாஹல் இருக்கிறார். 

பெங்களூர் அணியில் இரண்டு திறமை வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதும் அந்த அணியின் வெற்றி வாய்ப்புக்கு முக்கிய காரணம். டெல்லி போட்டி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாஷிங்கடன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

முதல் எட்டு ஓவரில் நான்கு ஓவர்களை சுந்தரே வீசினார். அவர் சிறப்பாக பந்து வீசிய போதும் மற்ற பெங்களூர் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரி இறைத்தனர்.