வீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்
வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஐபிஎல் நிர்வாகம், “ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பில் எந்த சமரமும் செய்யமுடியாது.
வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதியே ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா சூழலில் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன” என தெரிவித்திருக்கிறது. பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகிகள் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக, டெல்லி அணியின் அமித் மிஸ்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொல்கத்தா அணியை சேர்ந்த மேலும் 2 வீரர்களுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை அணியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் அவரது உதவியாளர் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் விரித்திமான் சஹாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவத்தொடங்கியத்தையடுத்து தற்காலிமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐயின் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார்.