கங்குலியை நிம்மதியாக இருக்க விடுங்கள்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்!

கங்குலியை அரசியலுக்கு வர அழுத்தம் கொடுப்பது கூட அவரது இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம் என சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கங்குலியை நிம்மதியாக இருக்க விடுங்கள்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்!

கங்குலிக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சில நாட்கள் முன்பு அவரை மேற்கு வங்காள கவர்னர் சந்தித்த விவகாரம் குறித்து ரசிகர்கள் காரசாரமாக விவாதம் செய்து வருகின்றனர்.

கங்குலியை அரசியலுக்கு இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், அந்த அழுத்தம் கூட அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட காரணமாக இருக்கலாம் எனவும் சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

கங்குலி பிசிசிஐ தலைவர் ஆனது முதல் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே குறுகிய காலத்தில் திட்டமிட்டு ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேகமாக பணியாற்றினார்.

வெற்றிகரமாக ஐபிஎல் தொடரை நடத்தி முடித்த நிலையில், அடுத்து உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி டி20 தொடரை நடத்த கடந்த புதன்கிழமை பெங்கால் கிரிக்கெட் அமைப்புடன் கூட்டம் நடத்தி சில யோசனைகளை கூறி இருந்தார்.

அதற்கு முன்னதாக ஞாயிற்றுக் கிழமை அன்று மேற்கு வங்காள கவர்னர் ஜகதீப் தான்கர் கங்குலியை அழைத்து பேசினார். அப்போது பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியதாக தகவல் வெளியானது. பிசிசிஐ தலைவரிடம் ஒரு மாநில கவர்னர் என்ன பிரச்சனை குறித்து விவாதம் செய்தார்? என்ற கேள்வி எழுந்தது.

சிலர் பாஜகவுக்கு கங்குலியை இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாக அப்போது கூறினர். அதற்கு பதில் அளித்த கங்குலி, கவர்னர் என்னை அழைத்தார். நான் சென்றேன். இதில் எந்த அரசியலும் இல்லை என விளக்கம் கூறி இருந்தார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால் கங்குலியை இழுத்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த பாஜக வியூகம் வகுத்து இருப்பதாக ஒரு பேச்சு உள்ளது. இந்த நிலையில்தான், கங்குலி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கங்குலியை அரசியலுக்கு வர அழுத்தம் கொடுப்பது கூட அவரது இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம் என சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். கங்குலி தற்போது நிலையாக இருப்பதாகவும், அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மட்டுமே செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.