உள்ளாடைகளில் டிஸ்யூ பேப்பரை வைத்துக் கொண்டு விளையாடினேன்! மனம் திறந்த சச்சின்!
ஒரு ரன் எடுத்துவிட்டு விழுந்துவிட்டேன், மீண்டும் எழ முயன்றேன் முடியவில்லை. என் உடம்புக்கு ஏதோ நடந்துவிட்டது என்று மட்டும் உணர முடிந்தது.

டெல்லியில் இந்தியா டுடே சார்பில் இன்ஸ்பிரேஷன் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சச்சின் பேசும் போது, ''கடந்த 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் நான் விளையாடியதை என்னால் மறக்க முடியாது.
அந்த இரு போட்டிகளுக்காக நான் எடுத்த முயற்சிகளும் அதிகம். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் என்னால் நின்று விளையாடக் கூடமுடியாத அளவுக்கு உடல் அசதியாக இருந்தது. உடலில் 500 கிலோ எடையைக் கட்டிவைத்தது போன்று இருந்தது.
அணியின் உடல் தகுதி நிபுணர் ஆன்ட்ரூ லீபஸிடம் சிகிச்சை பெற்று உப்பு கலந்த நீரைப் பருகிக்கொண்டே விளையாடினேன். ஒரு கட்டத்தில் என்னால் நின்று விளையாடக் கூட முடியவில்லை.
ஒரு ரன் எடுத்துவிட்டு விழுந்துவிட்டேன், மீண்டும் எழ முயன்றேன் முடியவில்லை. என் உடம்புக்கு ஏதோ நடந்துவிட்டது என்று மட்டும் உணர முடிந்தது. ஆனால், கட்டுப்படுத்திக் கொண்டு உப்பு நீரைக் குடித்து விளையாடினேன்.
ஆனால், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது எனக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு, என்னால் நடக்கக் கூட முடியாத அளவுக்கு உடல் அசதி இருந்தது. எனக்கு நானே ஒரு செயலைச் செய்து கொண்டேன். இந்தச் செயலை வெளியே கூறியதில்லை, சிறிது கூச்சமாகவும் இருக்கிறது.
அந்தப் போட்டியின் போது நான் களமிறங்க முடிவு செய்தபின் உள்ளாடையில் டிஷ்யூ பேப்பர்களை வைத்துக் கொண்டு களமிறங்கி விளையாடினேன். அந்தப் போட்டியின் இறுதியில் என் உடல்நிலை மிகவும் மோசமாகி, நான் சோர்வடைந்தேன்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போதே நான் வயிற்றுப்போக்கால் சோர்வடைந்திருந்தேன். உடல்நிலை சரியில்லாத நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியபோது மேலும் உடல்நிலை மோசமானது.






