இந்திய ஜெர்சி அணிந்து.. அத்துமீறி நுழைந்து அலப்பறை - விழுந்து சிரித்த இந்திய வீரர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நபர் ஒருவரின் சேட்டை தற்போது வைரலாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2 வது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று (ஆக.14) மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று (ஆக.15) நான்காம் நாள் ஆட்டத்தில், இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் விளையாடுகிறது. இதற்கிடையே நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியது.
அதவாது, நேற்று இரண்டாவது செஷன் ஆட்டம் நடந்து கொண்டிருந்த போது, மைதானத்துக்குள் ஒரு நபர் அத்துமீறி நுழைந்தார். அவரோ இங்கிலாந்துக்காரர். ஆனால், அவர் அணிந்திருந்தது இந்திய அணியின் ஜெர்ஸி.
அப்படியே ஒரு பக்காவான ஒரு இந்திய அணியின் ஜெர்ஸியை அவர் அணிந்திருந்தார். அதில், லோகோ, ஸ்பான்சர்ஸ் பெயர் என்று அனைத்தும் மிகச் சரியாக இருந்தது. ஜெர்ஸிக்கு பின்னால் ஒரு எண்ணும், அவரது பெயரும் (jarvo) இருந்தது.
கிரிக்கெட்டே தெரியாதவர்கள் அவரைப் பார்த்தால், நிச்சயம் அவர் யாரோ ஒரு பிளேயர் என்றே நினைப்பார்கள். அப்படி பெர்ஃபெக்ட்டாக களத்திற்குள் நுழைந்தவர், ஏதோ அணி வீரரைப் போல சகஜமாக மற்ற வீரர்களுடன் ஏதேதோ பேச முயற்சி செய்தார்.
இந்திய வீரர்களும் ஒரு நொடி "யார்ரா இவன்" என்ற ஆச்சர்யப்பட்டு போனார்கள். நமக்கு தெரியாமல் ஒரு புது பிளேயரை பிசிசிஐ அனுப்பிவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு மிக பெர்ஃபெக்ட்டாக இருந்தார் அந்த நபர்.
உடனடியாக மைதானத்திற்குள் நுழைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை அப்புறப்படுத்த முயற்சிக்கும் போது, அவர் இந்திய அணியின் ஜெர்ஸியை காண்பித்து, அதிலிருந்த லோகோவை காண்பித்து, நானும் ஒரு இந்தியன் பிளேயர் என்பது போது செய்கை காண்பித்தார்.
எனினும், அந்த நபரை மடக்கிப் பிடித்த அதிகாரிகள், அவரை அப்படியே அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர். அந்த நபர் உள்ளே வந்ததற்கு கூட இந்திய வீரர்கள் சிரிக்கவில்லை.
அவர், இந்திய அணியின் ஸ்பான்சர்ஸ் பெயரை எல்லாம் அதிகாரிகளிடம் காட்டி விளக்க முயற்சித்ததை நினைத்து அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.
இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதன் பிறகு வீட்டிற்கு சென்ற அந்த நபர், தன் வீட்டில் இருந்து ஜெர்ஸியை கழட்டி வீடியோ எடுத்து, 'நான் தான் அந்த சேட்டைக்கு சொந்தக்காரன்' என்று சொல்லி வீடியோவும் வெளியிட்டுள்ளார். இவரைப் போன்றவர்களைத் தான் 'Attention Seekers' என்று அழைப்பார்கள்.
அதாவது, மற்றவர்களின் கவனத்தை தன் மீது திருப்ப இதுபோன்ற கோமாளித்தனமான வேலையைச் செய்வார்கள். அதற்காக எந்த எல்லைக்கும் அவர்கள் போவார்கள். அதேசமயம், இது சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய விஷயம் அல்ல.
உள்ளே நுழைந்த அந்த நபர் கையில் ஆயுதம் வைத்திருந்தால்? ஒரு துப்பாக்கி வைத்திருந்தால்? நினைத்துப் பாருங்கள். இது போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு, இந்த கோமாளித்தன வேலைகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.