சிஎஸ்கே அணியை விட்டு விலகிய ரகசியம்.. ரெய்னா பரபர பேட்டி!

2021 ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் தொடர்ந்து பங்கு பெறுவாரா?

 சிஎஸ்கே அணியை விட்டு விலகிய ரகசியம்.. ரெய்னா பரபர பேட்டி!

2020 ஐபிஎல் தொடரில் இருந்து தொடருக்கு முன் விலகினார் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அவருக்கும் இடையே விரிசல் எழுந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், தான் ஏன் அப்போது விலகினேன் என் சுரேஷ் ரெய்னா ஒரு பேட்டியில் பேசி உள்ளார். தனக்கு அது பற்றி எந்த கவலையும் இல்லை என அவர் கூறி இருக்கிறார்.

2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சிஎஸ்கே அணியுடன் இணைந்து துபாய் வரை சென்றார் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே முகாமில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட தகவல் வெளியான நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இந்தியா திரும்பினார்.

அப்போது அவர் ஹோட்டல் அறையில் வசதிகள் இல்லை என்ற கருத்து வேறுபாடு காரணமாக அணி நிர்வாகம் மற்றும் தோனியுடன் விரிசல் ஏற்பட்டு விலகியதாக தகவல் பரவியது. அது பற்றி சிஎஸ்கே நிர்வாகமோ, ரெய்னாவோ இதுவரை பேசவில்லை.

இந்த நிலையில், அப்போது விலக என்ன காரணம் என ரெய்னா விளக்கம் அளித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது பற்றி வருத்தம் இல்லையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அதில் என்ன வருத்தம் இருக்கப் போகிறது? நான் என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டேன் என கூறி உள்ளார்.

என் குடும்பதுக்காகவே நான் வர வேண்டும் என நினைத்தேன். பஞ்சாபில் ஒரு சம்பவம் நடந்தது. அவர்கள் நான் இங்கே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். என் மனைவி பெருந் தொற்றுநோய் இருப்பதால் இங்கே இருக்க வேண்டும் என நினைத்தார். அந்த சமயத்தில் இது புத்திசாலித்தனமான முடிவு என நான் நினைத்தேன் என்றார் ரெய்னா.

2021 ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் தொடர்ந்து பங்கு பெறுவாரா? அல்லது அந்த அணியால் விடுவிக்கப்பட்டு ஏலத்தில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.