2020ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய கிரிக்கெட் சர்ச்சைகள்!

2020ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய கிரிக்கெட் சர்ச்சைகள்!

5. அனுஷ்கா ஷர்மா, சுனில் கவாஸ்கர் மோதல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது சுனில் கவாஸ்கர் வர்ணனையாளராக இருந்தார். அப்போது பேசிய கவஸ்கர், ‘விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் பந்தில் மட்டுமே பயிற்சி செய்திருப்பார் போல’ என சர்ச்சைக்குரிய வார்த்தைகளை உதிர்த்தார்.

இதனால், கடுப்பான அனிஷ்கா ஷர்மா சுனில் கவாஸ்கருக்கு சமூக வலைதளம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்தார். அதன்பிறகு, தான் பேசிய வார்த்தைகள் குறித்து விளக்கமளித்த கவாஸ்கர், லாக் டவுனின்போது கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவர் மட்டும் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை பார்த்தேன். அதை மனதில் வைத்துத் தான் பேசினேன் எனக் கூறி பிரச்சனையை ஆஃப் செய்தார்.

4. சுரேஷ் ரெய்னா நாடு திரும்பியது

துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சுரேஷ் ரெய்னா அவசர அவசரமாக நாடு திரும்பினார். அவருக்குத் திருப்தியான அறை ஒதுக்காத காரணத்தினால்தான் நாடு திரும்பினார் என வதந்திகள் பரவத் துவங்கின. இறுதியில் மனம் திறந்த சுரேஷ் ரெய்னா, குடும்ப சூழ்நிலை காரணமாகத் தான் நாடு திரும்பினேன் என விளக்கமளித்தார்.

3. கங்குலியை மதிக்காத ரோஹித்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. 

இதனால், அவர் அடுத்த சில போட்டிகளில் களமிறங்கவில்லை. இதுகுறித்து அப்போது கருத்துத் தெரிவித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, “ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் இருக்கிறது.

இதனால், தற்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் ரோஹித் ஷர்மா எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் களமிறங்காமல் இருப்பது நல்லது” எனத் தெரிவித்திருந்தார். 

ஆனால், கங்குலி பேட்டி கொடுத்த சில மணி நேரங்களில் சன்ரைசர்ஸ் ஹைதாராப் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டிகளில் களமிறங்கி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

2. ஜடேஜாவுக்கு மாற்று வீரர் சஹல்

கான்பெராவில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியின்போது டெத் ஓவரில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து, பேட்டிங் செய்துகொண்டிருந்த ஜடேஜாவின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. 

தொடர்ந்து பேட்டிங் செய்தபோது தொடை எலும்புப் பகுதி காயம் காரணமாக அவதிப்பட்டார். இந்த காயங்களுடன் விளையாடி, 23 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் ஸ்கோரை 161/7 ஆக உயர்த்தினார். அதன்பிறகு ஓய்வு அறைக்குச் சென்ற ஜடேஜா மருத்துவரை அழைத்து எனக்கு மயக்கமாக வருகிறது.

அதனால், பீல்டிங் செய்வது சாத்தியமா எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். உடனே இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பீல்டிங் செய்ய ஜடேஜா உடல் ஒத்துழைக்காது என மூன்றாம் நடுவரிடம் சான்று அளித்தனர். 
இதனால், ஜடேஜாவுக்குப் பதிலாக யுஷ்வேந்திர சஹலை மாற்று வீரராகச் சேர்த்துக் கொள்ள கேப்டன் விராட் கோலி மூன்றாம் நடுவரிடம் அனுமதி கேட்டார். திருப்தியான பதில் கிடைத்ததும் சஹல் களமிறங்கினார். 

ஐசிசி வெளியிட்ட புது விதிமுறைப்படி, மாற்று வீரர் பேட்டிங் செய்ய, பந்துவீச முடியும். ஆனால், ஆல்-ரவுண்டர் ஜடேஜாவுக்குப் பதிலாக முழுநேரப் பந்துவீச்சாளர் யுஷ்வேந்திர சஹல் களமிறங்கியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

1. முகமது ஆமர் திடீர் ஓய்வு

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் (28), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய நிர்வாகத்தை விமர்சித்துப் பேட்டி கொடுத்துவிட்டு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்துடன் இணைந்து என்னால் விளையாட முடியாது. மெண்டல் டார்சர் அனுபவித்து வருகிறேன் எனப் பேசினார். 

இதுகுறித்துப் பதிலளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், “சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாக அமீர் எங்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரின் விருப்பத்திற்கு நாங்கள் தடையாக இருக்க மாட்டோம். இது முற்றிலும் அவர் சுயமாக எடுத்த முடிவு” எனத் தெரிவித்தது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0