முதல் போட்டியில் யாருக்கு வெற்றி..?

ஐபிஎல் தொடருக்கான போட்டிகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், முதல் போட்டியில் தோனியா ? ரோகித்தா ? என தற்போது ரசிகர்கள் வரிந்து கட்டத் தொடங்கியுள்ளனர்.

முதல் போட்டியில் யாருக்கு வெற்றி..?

ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், எந்த தேதியில் எந்தெந்த அணிகள் எங்கே மோதுகின்றன என்ற பட்டியல் வெளியாகவிட்டது. 

முதல் போட்டியிலேயே பரம்பரை போட்டியாளர்களாக ஐபிஎல் ரசிகர்களிடையே கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற கணிப்புகள் இப்போதே தொடங்கிவிட்டன. ஐபிஎல் என்றாலே ஆரம்பம் முதலே அதிரடியாய் வெற்றிகளைக் குவிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மட்டும் பெரும்பாலும் சறுக்கி விடும்.

இதனால், சென்னை ரசிகர்களும் ஏமாற்றம் அடைகின்றனர். யாரிடம் வேண்டுமானாலும் தோற்றுக் கொள்ளுங்கள், ஆனால் மும்பையிடம் தோற்றுவிடாதீர்கள் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வந்து குமுறுவதும் வழக்கமான கதைதான். 

மும்பையிடம் சென்னை தோற்றாலோ அல்லது சென்னையிடம் மும்பை தோற்றாலோ அன்றைய தினம் சமூக வலைத்தளங்கள் இரு அணியின் ரசிகர்களாலும் அலறிப் போகும்.

ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் மோதிக்கொள்ளும் போதும், சென்னை மற்றும் மும்பை போட்டிகள் என்றாலே பெரும் கவனிப்பு தான். ஏனென்றால் இரு அணிகளின் பங்காளிப் பகையும் அவ்வளவு இருக்கிறது. 

2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில், சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகள் மட்டுமே மொத்தம் 4 முறை இறுதிப் போட்டியில் மோதியுள்ளன. இதில் சென்னை அணி ஒரு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறையும் வென்றுள்ளது.

2019-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த முறை சென்னை பதிலடி கொடுத்து தோல்வியை சமன் செய்யும் என ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். 

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 149 ரன்கள் எடுத்தது. சென்னையில் சிறப்பாக பந்துவீசிய தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தஹிர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 

இதைத்தொடர்ந்து ஆடிய சென்னை அணி சீரான பேட்டிங் வரிசையை கொண்டிருந்தாலும், மும்பை பவுலிங்கிடம் தாக்கு பிடிக்க முடியாமல், ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. பும்ரா, மலிங்காவும் சென்னை பேட்ஸ்மேன்களை சரித்தனர். தோல்வியால் சென்னை ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.


அந்தப் போட்டிக்கு பிறகு நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. வரும் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த அறிவிப்பு வெளியானது முதலே சமூக வலைத்தளங்களில் இரு அணி ரசிகர்களும் தங்கள் மீம்ஸ் மோதல்களை தொடங்கிவிட்டனர். இறுதிப் போட்டியில் தோற்றதுக்கு பின்னர் முதல் போட்டியே மும்பையுடன் மோதுவதால், இறுதிப்போட்டியின் தோல்விக்கு பழி தீர்க்குமா சென்னை என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேசமயம் உலகக் கோப்பைக்குப் பின்னர் தோனி ஒரு போட்டியில் கூட விளையாடாமல், இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவதால், அவரது ஆட்டத்தைக் காண அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். 

இதற்கிடையே அவர் சர்வதேச போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றிருப்பதால் இனி ஐபிஎல் தொடரில் மட்டுமே அவரை காண முடியும் என்பதால் ரசிகர்கள் தோனியை கொண்டாடுவதில் எந்தக் குறையும் வைக்கமாட்டார்கள் என்பது உறுதி. 

இருப்பினும் மைதானத்தில் தோனி, தோனி எனக் காணப்படும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை இந்த ஐபிஎல் போட்டியில் காண முடியாது என்பது ஒரு குறைதான்.. அதுமட்டுமின்றி கொரோனா தனிமைப்படுத்தல், பரிசோதனை கெடுபிடிகள் என சற்று மன அழுத்ததில் இருக்கும் வீரர்கள், இந்த ஐபிஎல் போட்டியை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதும் கேள்விக்குறிதான்.

இருப்பினும்.. மும்பை - சென்னை போட்டியை தொலைக்காட்சியில் பார்க்கும் மகிழ்ச்சியில் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் எவ்வித சந்தேகமும் இல்லை.