யுவராஜ் சிங் சிலை திறக்கப்பட்டது!

2018ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளுக்குப் பின்னர் ஜூன் 10ஆம் தேதி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். இதுவரை ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போன வீரர்களில் யுவராஜ் சிங் இன்றுவரை முதலிடத்தில் இருக்கிறார்.

யுவராஜ் சிங் சிலை திறக்கப்பட்டது!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் முழு உருவச் சிலை பஞ்சாபில் அமைந்துள்ள ஃபெரோஸ்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க மைதானத்துக்கு வெளியே திறக்கப்பட்டுள்ளது. 

2013ஆம் ஆண்டில் பிகார் மாநிலத்தில் சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு முழு உருவச் சிலை திறக்கப்பட்டதற்குப் பிறகு இரண்டாவது வீரராக சவுரவ் கங்குலி அவர்களுக்கு 2017ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தின் பலுர்காட் மைதானத்தில் முழு உருவச் சிலை திறக்கப்பட்டது. 

சச்சின், கங்குலிக்குப் பிறகு இந்தியாவில் மூன்றாவதாக முழு உருவச் சிலை திறக்கப்பட்டது யுவராஜ் சிங் அவர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்காக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய யுவராஜ் சிங், பல இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியாவை வெற்றிப் பாதையில் கொண்டுசென்றிருக்கிறார். 

தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பக்கட்டத்திலேயே வெளியேறினாலும், யுவராஜ் சிங் கடைசிவரை போராடி டீமின் ஸ்கோரை உயர்த்துவார். மேலும் இடதுகை சுழற்பந்து வீச்சால் முக்கியமான விக்கெட்டுகளையும் எடுத்து இந்திய அணியின் ஆல் ரவுண்டராகவும் திகழ்ந்தார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இவரது சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. 

மேலும் வெள்ளைப் பந்தில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெரும் பக்கபலமாக இருந்த யுவராஜ் சிங் 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இவர் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக் கோப்பைப் போட்டியின் தொடர் நாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளின்போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ், இதற்காக 2012ஆம் ஆண்டில் சிகிச்சைப் பெற்று மீண்டும் இந்திய அணியில் இணைந்தார். 

2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் மோசமாக விளையாடியதற்கு இந்திய ஊடகங்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்ட யுவராஜ் சிங், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிக மோசமான தருணங்களில் 2014ஆம் ஆண்டு இலங்கையுடன் விளையாடிய டி20 போட்டியைச் சுட்டிக்காட்டினார். 

அதற்குப் பிறகு இந்திய அணியில் பேசும்படியாக எந்த வித சாதனையையும் யுவராஜ் நிகழ்த்தவில்லை. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இவரது பெயர் சேர்க்கப்படவில்லை. அடுத்த ஆண்டும் இந்திய அணியின் பல ஆட்டங்களில் யுவராஜ் சிங்கின் பெயர் இடம்பெறவில்லை.

2016ஆம் ஆண்டில் உள்ளூர் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி ஐந்து போட்டிகளில் 700 ரன்களை எடுத்த பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார் யுவராஜ் சிங். 2017ஆம் ஆண்டு கட்டாக்கில் நடைபெற்ற இங்கிலாந்துடனான போட்டியில் 150 (127) ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தார்.

2018ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளுக்குப் பின்னர் ஜூன் 10ஆம் தேதி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். இதுவரை ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போன வீரர்களில் யுவராஜ் சிங் இன்றுவரை முதலிடத்தில் இருக்கிறார். உலகக் கோப்பை போட்டிகளில் 300 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0