இந்திய அணியின் பல வருட தேடலுக்கு விடை கொடுத்த தமிழர்.. "சுந்தரை போற்று"!

இந்திய அணி பல வருடமாக தேடி வந்த மிடில் ஆர்டர் வீரர் தற்போது கிடைத்துவிட்டார். அவர் வேறு யாரும் இல்லை.. தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர்.

இந்திய அணியின் பல வருட தேடலுக்கு விடை கொடுத்த தமிழர்.. "சுந்தரை போற்று"!

இந்திய அணியில் யுவராஜ் சிங் சென்ற பிறகு யாரை மிடில் ஆர்டரில், குறிப்பாக 4வது அல்லது 5வது இடத்தில் ஆட வைப்பது என்ற கேள்வி நிலவி வந்தது. 

இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற விஜய் சங்கர், மணீஷ் பாண்டே, அம்பதி ராயுடு, ரெய்னா, தினேஷ் கார்த்திக் என்று பலர் இந்த இடத்தில் ஆட வைக்கப்பட்டனர்.

ஆனால் எந்த வீரரும் தொடர்ச்சியாக இந்த இடத்தில் உறுதியாக ஆடவில்லை. கோலிக்கு அடுத்து, பாண்டியாவிற்கு முன்பு இறங்க வேண்டும். இப்படி ஒரு வீரரை இந்திய அணி தேடி வந்தது.

அதேபோல் யுவராஜ் சிங் போல பவுலிங் ஆப்ஷன் கொடுக்கும் வீரராகவும் இவர் இருக்க வேண்டும் என்று இந்திய அணி தேடியது. இதனால்தான் அம்பதி ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் வாய்ப்பு பெற்றார். ஆனால் 4வது இடத்தில் களமிறங்கிய எந்த வீரரும் இந்திய அணியில் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது இந்திய அணியில் ராகுல், பண்ட் போன்ற வீரர்கள் 4 மற்றும் 5வது இடத்தில் இறங்குவார்கள். இவர்களுடன் சேர்த்து மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய சிறந்த தேர்வாக வாஷிங்க்டன் சுந்தர் மாறியுள்ளார். தற்போது 6வது இடத்தில் சுந்தர் டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் பேட்டிங் செய்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் இவர் மிகவும் நேர்த்தியாக ஆடுகிறார். இவரின் ஷாட் தேர்வு. ஸ்பின், வேகப்பந்து வீச்சாளர்களை இவர் எதிர்கொள்ளும் விதம். பொறுமை. இக்கட்டான சூழ்நிலையிலும் டென்சன் ஆகாமல் இவர் பேட்டிங் செய்யும் விதம் கோலியை கவர்ந்து இருக்கிறது.

மிட்சல் ஸ்டார்க், பாட்டின்சன், ஆர்ச்சர், லைன், ஆண்டர்சன் என்று உலகத்தரமான பவுலர்களை இவர் மிக சாதாரணமாக எதிர்கொண்டார். இவரின் பேட்டிங் திறமை பார்த்து பிசிசிஐ பெரிய அளவில் உற்சாகம் அடைந்துள்ளது . 

இத்தனை வருடமாக நாம் தேடிய ஆல் ரவுண்டர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இவர்தான் என்று இந்திய அணி உற்சாகம் அடைந்துள்ளது .

டெஸ்ட் அணியில் ஏற்கனவே இவருக்கு பேட்டிங்கில் அஸ்வினுக்கு முன்பாக இறங்கும் வகையில் புரோமோஷன் கிடைத்துள்ளது. இன்னொரு பக்கம் இவர் டி 20 மற்றும் டெஸ்ட் போட்டியிலும் டவுன் தி ஆர்டரில் ஆடுவார் என்று கூறுகிறார்கள். பண்டிற்கு முன்பாக இவர் களமிறங்க நிறைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இந்திய அணியில் சூர்ய குமார் போன்ற வீரர்களை கொண்டு வரும் எண்ணம் கோலிக்கு இல்லை. இதனால் தமிழரான சுந்தரை மிடில் ஆர்டரில் வளர்த்துவிட கோலி முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். இந்தியாவின் மூன்று பார்மெட் அணியிலும் சுந்தர் கோலோச்சும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் கூறப்படுகிறது.