முதல்ல அவரை டீமை விட்டு அனுப்புங்க.. 35 வயது வீரரை கழட்டி விட சிஎஸ்கே முடிவு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து யாரை விடுவிப்பார்கள்? என்ற கேள்வி எழுந்து இருந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கு முன் ஐபிஎல் அணிகள் வீரர்களை விடுவிக்க உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு மூத்த வீரரை நீக்கியே ஆக வேண்டும் என அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது வேறு யாருமல்ல, 2020 ஐபிஎல் தொடரில் படுமோசமான ஆடிய கேதார் ஜாதவ் தான்.
2021 ஐபிஎல் தொடருக்கு முன் மினி ஏலத்தை நடத்த உள்ளது பிசிசிஐ. பிப்ரவரி மாதம் அந்த ஏலம் நடைபெறக் கூடும். இந்த நிலையில், ஜனவரி 20ஆம் தேதிக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் இருந்து வீரர்களை விடுவிக்கவும், வீரர்களை தங்களுக்குள் அணி மாற்றம் செய்து கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது பிசிசிஐ.
ஒவ்வொரு அணியும் அடுத்து வரும் நாட்களில் வீரர்களை விடுவிக்கும் முடிவுகளை எடுப்பார்கள். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து யாரை விடுவிப்பார்கள்? என்ற கேள்வி எழுந்து இருந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
கேதார் ஜாதவ்வை நிச்சயம் சிஎஸ்கே அணி நீக்கும் என அந்த அணி வட்டாரத்தில் இருந்து செய்தி கசிந்துள்ளது. அவர் 2020 ஐபிஎல் தொடரில் மோசமாக சொதப்பினார். அதிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த போட்டியில் அவர் கடைசி ஓவர்களில் 12 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து இருந்தது மறக்க முடியாதது.
அவர் அந்த சீசனில் மொத்தமாக 8 போட்டிகளில் 62 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 93.93. மேலும், அவர் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. சிஎஸ்கே அணியின் தோல்விகளுக்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
அவரது தற்போதைய ஐபிஎல் விலை 7.8 கோடி ஆகும். அத்தனை சம்பளம் கொடுத்து அவரை வைத்திருப்பது வீண் என்ற முடிவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இளம் வீரர்களை ஏலத்தில் வாங்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.






