இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான்

போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் பெற்ற 297 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடிய நியூஸிலாந்து 659 ஓட்டங்களை குவித்தது.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான்

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் பெற்ற 297 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடிய நியூஸிலாந்து 659 ஓட்டங்களை குவித்தது.

கிறைஸ்சர்ச்சில் நடைபெறும் இந்தப் போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டங்களுடன் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் 112 ஓட்டங்களுடனும், ஹென்ரி நிகோல்ஸ் 89 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய இவர்கள் மேலும் ஓட்டங்களைக் குவித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டுசென்றனர். கேன் வில்லியம்ஸன் இரட்டை சதமடித்தார். இது டெஸ்ட் அரங்கில் அவரது நான்காவது இரட்டை சதமாகும்.

அத்துடன் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்கள், ஓர் சதம் உட்பட 4 இன்னிங்ஸ்களில் அவர் 639 ஓட்டங்களைக் குவித்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மறுமுனையில் ஹென்ரி நிகோல்ஸ் சதமடித்தார்.கேன் வில்லியம்ஸனும் ஹென்ரி நிகோல்ஸும் நான்காம் விக்கெட்டுக்காக 90 க்கு மேற்பட்ட ஓவர்களை எதிர்கொண்டு 369 ஓட்டங்களை பகிர்ந்தார்கள். இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் நான்காவது விக்கெட்டுக்காக நியூஸிலாந்து ஜோடியின் சாதனை இணைப்பாட்டமாகும்.

364 பந்துகளை எதிர்கொண்ட கேன் வில்லியம்ஸன் 28 பௌண்டரிகளுடன் 238 ஓட்டங்களையும், ஹென்ரி நிகோல்ஸ் 291 பந்துகளில் ஒரு சிக்ஸர், 18 பௌண்டரிகளுடன் 157 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்வரிசையில் வந்த டார்லி மிச்செலும் சதமடித்து பாகிஸ்தானுக்கு மேலும் அச்சுறுத்தல் விடுத்தார். டார்லி மிச்செல் 102 ஓட்டங்களையும், கைல் ஜேமிஸன் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூஸிலாந்து அணி 659 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இதன்படி பாகிஸ்தான் அணி 362 ஓட்டங்களால் பின்தங்கியது.

சஹின் சஹா அப்ரிடி, மொஹம்மட் அப்பாஸ், பஹீம் அஸ்ராப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் முயற்சியில் இறங்கிய பாகிஸ்தான் 3 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. ஸான் மசூட் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு மேலும் 354 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0