ஓய்வை அறிவித்தார் நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன்

நியூசிலாந்து அணிக்காக ஆடியதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எனக்கு நானே பல கேள்விகளை கேட்டுத் தான் இந்த முடிவுக்கு வந்தேன்.

ஓய்வை அறிவித்தார் நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கோரி ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு நியூசிலாந்து அணியில் இடம் பெறாத கோரி ஆண்டர்சன், 13 டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 31 இருபது ஓவர் போட்டியில் விளையாடி மொத்தம் 2 சதம், 10 அரைசதம் உள்பட 2,277 ஓட்டங்களும் , 90 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

அமெரிக்காவில் 2022-ம் ஆண்டில் தொடங்க இருக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் அவர் அதற்காக அமெரிக்கா சென்று குடியேற முடிவு செய்துள்ளார்.

இது குறித்து 29 வயதான கோரி ஆண்டர்சன் கூறுகையில்,

நியூசிலாந்து அணிக்காக ஆடியதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எனக்கு நானே பல கேள்விகளை கேட்டுத் தான் இந்த முடிவுக்கு வந்தேன்.

எனது வருங்கால மனைவி மேரி மார்க்கரெட் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். எனக்காக அவர் நியூசிலாந்து வந்து புதிய கலாசாரத்தில் வாழ்ந்து நிறைய தியாகம் செய்துள்ளார்.

எனவே வாய்ப்பு கிடைக்கும் போது அமெரிக்காவில் வாழ்வது தான் நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம். எனது கிரிக்கெட்டுக்காக மட்டுமின்றி எங்கள் இருவருடைய பொதுவான வாழ்க்கைக்கும் இதுவே சிறந்த முடிவாகும் என்றார்.