அந்த கடைசி ஓவர்.. சிஎஸ்கேவின் கிளைமாக்ஸ் பன்ச்! 

தான் ஒரு சாம்பியன் பவுலர் என்பதை வெளிக் காட்டினார் பிராவோ. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

அந்த கடைசி ஓவர்.. சிஎஸ்கேவின் கிளைமாக்ஸ் பன்ச்! 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. இந்தப் போட்டியில் சேஸிங் செய்த ஹைதராபாத் அணி சிஎஸ்கேவின் பந்துவீச்சில் சிக்கி தடுமாறி விக்கெட்களை இழந்தது. 

கடைசி ஓவரில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது ஹைதராபாத். அப்போது கடைசி ஓவரில் டிவைன் பிராவோ அதிரடியாக பன்ச் வைத்து போட்டியை முடித்தார். 

சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி துபாயில் நடைபெற்றது. துபாய் ஆடுகளம் மந்தமாக இருந்ததால் முதலில் பேட்டிங் செய்யும் அணி 160 ரன்கள் எடுத்தாலே சேஸிங் செய்யும் அணி திணறி தோல்வி அடைந்து விடும் நிலை இருந்தது. 

தோனி அதிரடி ஆட்டம் ஆடி 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். அவருக்கு பின் வந்த பிராவோ இந்த சீசனில் தன் முதல் பேட்டிங் வாய்ப்பில் எதிர்பாராத வகையில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். 

சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 167 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணி திட்டமிட்ட ஸ்கோரை எடுத்ததால், ஹைதராபாத் அணிக்கு அழுத்தம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், வார்னர் 9 ரன்களிலும், மனிஷ் பாண்டே 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 

தோனி இந்தப் போட்டியில் ஏழு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். அதனால், ஹைதராபாத் அணி செய்வதறியாது தவித்தது. எந்த பந்துவீச்சாளரின் ஓவரையும் குறி வைத்து ஆட முடியவில்லை. இந்த நிலையில் பிராவோ ஓவர்களை கடைசியில் பயன்படுத்தினார் தோனி. 

கேன் வில்லியம்சன் மட்டுமே ஹைதராபாத் அணியில் போராடி ரன் சேர்த்தார். அவர் 39 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அவர் உட்பட 18 ஓவர்களுக்குள் 6 விக்கெட் இழந்து 141 ரன்கள் எடுத்திருந்தது ஹைதராபாத். 19வது ஓவரில் ரஷித் கான் ஆட்டமிழந்தார். அடுத்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே பேட்டிங் செய்யக் காத்திருந்தனர். 

இந்த நிலையில் கடைசி ஓவரில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடினர் ஹைதராபாத் அணியின் ஷாபாஸ் நதீம் மற்றும் சந்தீப் சர்மா. பிராவோ அனுபவ பந்துவீச்சாளர் என்பதால் அவர்களால் பந்தை தொடக் கூட முடியாத அளவுக்கு வீசினார். 

முதல் இரண்டு பந்துகளை டாட் பாலாக வீசிய அவர், மூன்றாவது பந்தில் நதீம் விக்கெட்டை சாய்த்தார். அடுத்த மூன்று பந்துகளில் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்தார் பிராவோ. சேஸிங்கில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெறும் 1 ரன் கொடுப்பது நம்பவே முடியாத பந்து வீச்சாக அமைந்தது. 

தான் ஒரு சாம்பியன் பவுலர் என்பதை வெளிக் காட்டினார் பிராவோ. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தான் சிஎஸ்கே அன் தன் பழைய பாணியில் எந்த பக்கமும் பலவீனமாக இல்லாமல் எதிரணியை துவம்சம் செய்து வென்றது. பாதி தொடர் முடிந்துள்ள நிலையில் சிஎஸ்கே தன் அதிரடியை துவக்கி உள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0