நம்பவே முடியாத மாபெரும் வெற்றி.. பெங்களூர் அணியிடம் கொல்கத்தா சரண்

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

நம்பவே முடியாத மாபெரும் வெற்றி.. பெங்களூர் அணியிடம் கொல்கத்தா சரண்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது பெங்களூர் அணி. 

2020 ஐபிஎல் தொடரின் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. 

இந்தப் போட்டியில் கடினமான ஆடுகளத்தில் ஏபி டி வில்லியர்ஸ் ஆடிய அதிரடி ஆட்டம் தான் போட்டியை தலைகீழாக மாற்றியது. 

பெங்களூர் - கொல்கத்தா போட்டி 2020 ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் துவக்க வீரர்கள் ஆரோன் பின்ச் - தேவ்தத் படிக்கல் பெரிய அளவில் அதிரடி ஆட்டம் ஆடவில்லை. 

தேவ்தத் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆரோன் பின்ச் நிதான ஆட்டம் ஆடினார். மறுபுறம் விராட் கோலி ஆமை வேகத்தில் ஆடி அதிர்ச்சி அளித்தார். பின்ச் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிரடி மன்னன் ஏபி டி வில்லியர்ஸ் அடித்து ஆடத் துவங்கினார். 

கோலி - டி வில்லியர்ஸ் ஜோடி 46 பந்துகளை சந்தித்து 100 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் ஆடிய 33 பந்துகளில் தான் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 16வது ஓவர் முதல் பவுண்டரி அடித்துத் தள்ளினார் டி வில்லியர்ஸ். 33 பந்துகளில் 73 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

அதிரடி ஆட்டம் ஆடிய டி வில்லியர்ஸ் 5 ஃபோர், 6 சிக்ஸ் அடித்து இருந்தார். விராட் கோலி 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார். அவரால் டி வில்லியர்ஸ் போல அடித்து ஆட முடியவில்லை. வெறும் ஒரு ஃபோர் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தார். 

20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 194 ரன்கள் குவித்து இருந்தது பெங்களூர் அணி. ஷார்ஜா ஆடுகளம் மந்தமாக இருந்த போதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க திணறிய போதும், ஏபி டி வில்லியர்ஸ் மட்டுமே அதிரடி ஆட்டம் ஆடினார். 

அடுத்து 195 ரன்கள் என்ற இலக்குடன் ஆட வந்த கொல்கத்தா அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் நால்வர் ஒற்றை இலக்கத்தில், அதுவும் 70 ரன்களுக்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட்டமிழந்து இருந்தனர். 

ஷுப்மன் கில் மட்டுமே 25 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து இருந்தார். அதுவே இந்தப் போட்டியில் கொல்கத்தா பேட்ஸ்மேன் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர். டாம் பான்டன் 8, ராணா 9, மார்கன் 8, தினேஷ் கார்த்திக் 1, ரஸ்ஸல் 16, திரிபாதி 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

பெங்களூர் அணி கேப்டன் கோலி ஆறாவது ஓவர் முதல் ஏழு ஓவர்கள் தொடர்ந்து சாஹல் - வாஷிங்க்டன் சுந்தரை பந்து வீச வைத்தார். அந்த ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல் கடும் அழுத்தத்தில் சிக்கியது கொல்கத்தா. அது தான் பெரும் திருப்புமுனை. கிறிஸ் மோரிஸ்-உம் கட்டுக்கோப்பாக வீசி இருந்தார். 

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டம் தான் கொல்கத்தா அணியை அழுத்தத்தில் ஆழ்த்தி தோல்வி அடைய வைத்தது.