செஞ்சுரியனில் இலங்கை – தென்னாபிரிக்க சமர் இன்று ஆரம்பம்

இலங்கை அணியானது கடந்த 2019 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரை  2-0 என்ற கணக்கில் வென்று, தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றது.

செஞ்சுரியனில் இலங்கை – தென்னாபிரிக்க சமர் இன்று ஆரம்பம்

இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று செஞ்சுரியனில் ஆரம்பமாகவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பின் கீழ் வரும் இப் போட்டியானது இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளுக்குப் பிறகு இன்னும் சர்வதேச போட்டியில் விளையாடாத இலங்கை, தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. 

சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும் சர்வதேச போட்டி இதுவாகும்.

இறுதியாக திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியானது கடந்த ஜனவரி மாதம் சிம்பாப்வேக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி, தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது.

தென்னாபிரிக்க ஆடுகளங்களில் போட்டியிடுவது என்பது இரு அணிகளுக்கும் சவாலாக உள்ளது. எனினும் இலங்கை அணியானது கடந்த 2019 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரை  2-0 என்ற கணக்கில் வென்று, தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றது.

இதேவேளை தென்னாபிரிக்க அணியானது இறுதியாக 2018 – 2019 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை மாத்திரம் 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதன் பின்னர் எதிர்கொண்ட அனைத்து டெஸ்ட் தொடர்களையும் கோட்டை விட்டது.

முன்னாள் அணித் தலைவர் டுப்ளெஸிஸ் டெஸ்ட் தலைவர் பதவியிலிருந்தும் விலகியதும், அணிக்கு நிரந்தர தலைவர் இல்லாதது, கொவிட் தொற்று மூலம் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் மற்றும் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஆகியோரின் இழப்பு ஆகியவை தென்னாபிரிக்க அணியில் சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இந்த பிரச்சினைகள் அனைத்தையும் அறிந்திருந்தாலும், எதிர்ப்பை குறைத்து மதிப்பிட முடியாது என்று கூறியுள்ளார்.

மிக்கி ஆர்தர், தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார். ஆகவே இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி பயன்படுத்தும் தந்திரோபாய யுக்திகளை இலங்கை அணிக்கு வெளிப்படுத்துவார் மிக்கி ஆர்தர்.

இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க வீரர்கள் வியூகத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

போட்டி மற்றும் இலங்கை அணி குறித்து கருத்து தெரிவித்த மிக்கி ஆர்தர், 

இங்குள்ள பிட்ச்களில் உள்ள நிலைமைகளையும் நான் நன்கு அறிவேன். இங்கு பந்து வீச்சு வழக்கமாக மெதுவாகத் தொடங்கும். மூன்றாவது மற்றும் நான்காவது இன்னிங்ஸில் பந்து வேகமாகவும் துள்ளலாகவும் இருக்கும். 

ஆடுகளத்தின் மேற்பரப்பைப் பார்த்தால், நாங்கள் நாணய சுழற்சியில் வென்றால், பேட்டிங் குறித்து சரியான முடிவை எடுக்கும் திறன் உள்ளது.

லஹிரு குமாரா மற்றும் துஷ்மந்தா சமீரா 140 கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள். இலங்கை டெஸ்ட் அணியை நீண்ட காலமாக பிரதிநிதித்துவப்படுத்தி வரும் சுரங்கா லக்மல் அனுபவமும் திறமையும் கொண்ட முன்னணி பந்து வீச்சாளர்.

முழு அணியிலும் ஏழு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்றும், மாற்று வழிகளைத் தேடுவதற்கு விஸ்வா பெர்னாண்டோ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இம் ஆடுகளங்கள் இலங்கை கடந்த முறை விளையாடிய பிட்ச்களிலிருந்து வேறுபட்டவை. ஆனால் நான் தற்சமயம் செஞ்சுரியன் ஆடுகளத்தைப் பார்த்தது போல, இது ஒரு நல்ல ஆடுகளமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன், 

எங்களுக்கு அணியில் 21 வீரர்கள் உள்ளனர். இதற்கிடையில் எங்களிடம் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும் சுழல் பந்து வீச்சாளர்களும் உள்ளனர். எங்கள் முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் இந்த சூழ்நிலையை நன்றாக கையாள்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

இலங்கை அணியின் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு வீரரின் தோல்வி காரணமாக ஒரு போட்டியில் இருந்து மற்றொரு போட்டிக்கு வீரர்களை மாற்றும் முறை நிறுத்தப்பட்டது. 

மிக்கி ஆர்தர் வீரர்களுக்கு அணியில் நம்பிக்கையை வளர்ப்பதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு நீண்ட நேரம் அணியில் தங்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0