41 ஆண்டுக்கு பிறகு அரைஇறுதியை எட்டுமா இந்தியா? இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

41 ஆண்டுக்கு பிறகு அரைஇறுதியை எட்டுமா இந்தியா? இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 5-ம் நிலை அணியான இங்கிலாந்தை இன்று எதிர்கொள்கிறது.

லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவை தவிர்த்து ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா உள்ளிட்ட 4 அணிகளையும் போட்டுத் தாக்கி மிரட்டியது. ‘பி’ பிரிவில் அங்கம் வகித்த இங்கிலாந்து 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் தனது பிரிவில் 3-வது இடத்தை பிடித்தது.

கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 8 முறை சாம்பியனான இந்திய அணி கடைசியாக 1980-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. 

அதன் பிறகு தொடர்ச்சியாக சறுக்கலை சந்தித்த இந்தியாவுக்கு 41 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரைஇறுதியில் கால்பதிக்கும் வாய்ப்பு கனிந்துள்ளது. அதை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விரு அணிகளும் ஒலிம்பிக்கில் 8 முறை நேருக்கு நேர் மோதி அதில் தலா 4-ல் வெற்றி கண்டுள்ளன.

இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்4 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.