விரல் எலும்பில் வேகமாக பட்ட பவுன்சர்.. வலியோடு எழுந்து நின்ற புஜாரா

நான்காவது டெஸ்டில் இன்னும் 50 ஓவர்கள் மீதம் உள்ளது. இதில் 186 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் இந்திய அணி நிதானமாக ஆடி வருகிறது.

விரல் எலும்பில் வேகமாக பட்ட பவுன்சர்.. வலியோடு எழுந்து நின்ற புஜாரா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் புஜாரா காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா இந்த போட்டியில் வெற்றிபெற இன்னும் 200 ரன்களுக்கும் குறைவாகவே எடுக்க வேண்டும்.

இந்திய அணிக்காக அதிரடியாக ஆடிய சுப்மான் கில் 91 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த நிலையில் தற்போது புஜாரா மற்றும் ரஹானே இந்திய அணிக்காக பேட்டிங் செய்து வருகிறார்கள்.

நான்காவது டெஸ்டில் இன்னும் 50 ஓவர்கள் மீதம் உள்ளது. இதில் 186 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் இந்திய அணி நிதானமாக ஆடி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் மூத்த வீரர் புஜாரா காயம் அடைந்து வலியில் துடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுப்மான் கில் அவுட்டான பின் ஹஸல்வுட் ஓவரில் புஜாரா பேட்டிங் செய்து வந்தார். புஜாரா பேட்டிங் செய்யும் போது அவரை தாக்கும் விதத்தில் ஹஸல்வுட் குறி வைத்து பேட்டிங் செய்தார். உடலை நோக்கி பந்துகளை சரமாரியாக வீசினார்.

இதில் ஹஸல்வுட் 145 கிமீ வேகத்தில் வீசிய ஷார்ட் பந்து ஒன்று வேகமாக வந்து புஜாரா கையில் பட்டது. புஜாரா கிளவுஸ் அணிந்து இருந்தாலும் அதையும் தாண்டி அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே பேட்டை தூக்கி எறிந்துவிட்டு, புஜாரா கீழே விழுந்து துடிக்க ஆரம்பித்தார்.

கையில் இருந்த கிளவுஸை நீக்கிவிட்டு, கீழே விழுந்து புஜாரா கத்த தொடங்கினார். இதற்கு முன் பலமுறை புஜாரா கையில் காயம்பட்டு இருக்கிறது. ஆனால் ஒருமுறை கூட அவர் இந்த அளவிற்கு துடித்தது கிடையாது. ஆனால் இன்று மிகவும் கடுமையாக புஜாரா துடித்து போனார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே இவருக்கு கையில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பயிற்சியின் போதும் புஜாரா கையில் காயம் ஏற்பட்டது. இன்று இவருக்கு ஏற்பட்ட காயத்தில் விரல் எலும்பு கண்டிப்பாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

இதற்கு பின்பும் ஹஸல்வுட் வீசிய மோசமான பீமர் பந்து ஒன்று நேராக வந்து புஜாரா தலையை தாக்கியது. ஆனால் அதற்கு பின்பும் கலக்கம் இல்லாமல் புஜாரா களத்தில் உறுதியாக ஆடிக்கொண்டு இருக்கிறார். 

இந்த பந்துக்கு பின் ஹஸல்வுட்டை புஜாரா முறைத்து பார்த்த சம்பவம் ஒரு மாஸ் திரைப்பட காட்சி போல இருந்தது. இந்தியாவை இமாலய வெற்றியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதில் புஜாரா இன்று உறுதியாக இருக்கிறார். அவரின் போராட்டம் வெல்லும் என்று நம்பலாம்!