இந்தியா - இலங்கை: பழிவாங்கல் தொடருமா?

இந்திய அணியின் உலகக்கோப்பை கனவை சிதைத்ததற்காகப் பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்திய அணி, இலங்கையை வெற்றி பெறுவதாக ரசிகர்களால் பேசப்படும் அளவுக்கு இந்திய அணியின் ஆதிக்கம் அந்தப் போட்டிகளில் நிறைந்திருந்தது. 

இந்தியா - இலங்கை: பழிவாங்கல் தொடருமா?

இந்தியா - இலங்கை இடையே நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் கவுகாத்தியில் இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. 

இதுவரை இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய டி20 போட்டிகளில் 13-3 என்று இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஜனவரி 5ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளுக்கான இந்திய அணி கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

டி20 போட்டிகளில் இந்தியாவை இதுவரை மூன்று முறை வென்றுள்ள இலங்கை அணி, கடைசியாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகப் கோப்பை இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையைத் தட்டிச்சென்றது. 

அதற்குப் பிறகு இதுவரை இலங்கை அணி எந்த ஒரு டி20 போட்டியிலும் இந்தியாவை வென்றதில்லை. இந்திய அணியின் உலகக்கோப்பை கனவை சிதைத்ததற்காகப் பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்திய அணி, இலங்கையை வெற்றி பெறுவதாக ரசிகர்களால் பேசப்படும் அளவுக்கு இந்திய அணியின் ஆதிக்கம் அந்தப் போட்டிகளில் நிறைந்திருந்தது. 

அதுமட்டுமின்றி, இதுவரை எந்த இரு தரப்பு டி20 தொடரையும் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை கைப்பற்றியதும் இல்லை.

இலங்கையுடனான டி20 போட்டிகளில் 289 ரன்கள் எடுத்து ரோஹித் ஷர்மா முன்னிலை வகிக்கிறார். கோலி 283 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இன்னும் 7 ரன்கள் எடுத்தால் இலங்கையுடனான இரு தரப்பு டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். 

2019ஆம் ஆண்டு முடிவில் விராட், ரோஹித் இருவரும் 2,633 ரன்கள் எடுத்து சமமாக முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்தத் தொடரின் மூலம் விராட் கோலி உலகிலேயே டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையைப் பெறுவார். 2,436 ரன்களுடன் நியூசிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் குப்தில் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குடியரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் கடந்த மாதம் ஐந்து பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் இன்னும் அசாம் மாநிலத்தைப் பரபரப்பான நிலையில் வைத்துள்ளது. 

இந்த நிலையில் இந்தியா - இலங்கை இடையே நடக்கவுள்ள டி20 போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அசாம் கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் தேவாஜித் சைக்கியா, ‘இந்தியா - இலங்கை இடையேயான டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மைதானத்திற்குள் போஸ்டர்கள், மார்க்கர்கள், பேனர்கள் மற்றும் பேப்பர்களை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

செல்போன்கள், பணம் மற்றும் சாவிகள் மட்டுமே உள்ளே அனுமதி என்றார் தேவாஜித். மேலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூன்று போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெறவுள்ளதால் இந்த டி20 போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் மிகவும் கவனம் செலுத்திவருவதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த தேவாஜித் கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், மனிஷ் பாண்டே போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு காயம் காரணமாகப் பாதி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய ஷிகர் தவான் இம்முறை ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக இன்னிங்க்ஸைத் தொடங்கவுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு பும்ரா மீண்டும் களமிறங்கவுள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0