சக்ஸஸான ப்ளான் ‘பி’.. பந்துவீச்சில் அனுபவம் முழுவதையும் இறக்கிய கோலி.. 3ம் நாள் ஆட்டத்தின் முழு விவரம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் போட்டியில் 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சாமர்த்தியமான ஆட்டத்தால் இங்கிலாந்து சுருட்டப்பட்டது.

சக்ஸஸான ப்ளான் ‘பி’.. பந்துவீச்சில் அனுபவம் முழுவதையும் இறக்கிய கோலி.. 3ம் நாள் ஆட்டத்தின் முழு விவரம்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது.

இந்நிலையில் 3ம் நாளான இன்று இங்கிலாந்து 391 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இதில் கோலியின் மாஸ்டர் ப்ளான் சக்ஸஸ் ஆனது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 49 ரன்கள் எடுத்திருந்த போது, சிராஜ் ஓவரில் பந்து அவரது பேடில் பட்டது. சிராஜ் உட்பட அனைவரும் பலமாக அப்பீல் செய்தும், அம்பயர் சொன்னது 'நோ'. கையில் ஒரேயொரு ரிவ்யூ மட்டும் மீதமிருப்பதால், அதையும் வீணடிக்க கேப்டன் கோலி விரும்பவில்லை. 

ஆனால், அதன் பிறகு ரூட் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைசதம், 2ம் இன்னிங்ஸில் சதம் அடித்ததைத் தொடர்ந்து இப்போது மீண்டும் கேப்டன் ஜோ ரூட் அரைசதம் அடித்துள்ளார்.

அதாவது இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு, மிதமான வெயில் நிலவுகிறது. பந்தில் பெரிய அளவில் டர்ன் இல்லை. போட்டி தொடங்கி அரை மணி நேரத்திற்குள்ளேயே, 4 பவுண்டரிகள் வரை சென்றுவிட்டது. 

பந்து பேட்டிற்கு வாகாக வருகிறது. உண்மையில், இன்று 3வது நாளின் முதல் செஷனில், ஷமி ஓவரை விட, சிராஜ் ஓவரில் தான் இங்கிலாந்து சற்று தடுமாறி வருகிறது. அவரது பந்துகள் தான அடிக்கடி பேடை உரசிச் செல்கின்றன. இந்திய வீரர்களும் அவ்வப்போது அவுட் அப்பீல் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

உண்மையில், ரவீந்திர ஜடேஜா இந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இம்பேக்ட் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். ஏனெனில், அவரது லைன், லெந்த் தெளிவாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து ஓவர்கள் கொடுக்கப்பட்டால், நிச்சயம் இங்கிலாந்து அணியை ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு கூட அவர் விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். 

விறுட்.. விறுட்டென சீறும் அவரது பந்துகள், நிச்சயம் பைல்ஸ்களை தட்டிவிடும் என்று ஒரு பார்வையாளனாக எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்.. இன்று முதல் செஷனிலேயே ரவீந்திர ஜடேஜாவை வீச அழைத்திருக்கிறார் கேப்டன் கோலி.

பும்ராவுக்கு கடைசி 2 ஓவர்கள் உண்மையில் நன்றாக அமைந்திருக்கிறது. ரூட், பேர்ஸ்டோ இருவரும் திணறினார்கள். ஆஃப் ஸ்டெம்ப்பை குறிவைத்து பல பந்துகளை வீசினார். அதாவது, பேட்ஸ்மேன்கள் பந்தை லீவ் செய்து ரிலாக்ஸ் செய்வதற்கான வாய்ப்புகளை அவர் கொடுக்கவே இல்லை. 

அவர்கள் நிச்சயம் பந்தை பேட்டில் வாங்கியே ஆக வேண்டும். இல்லையெனில், ஒன்று போல்டாவார்கள் அல்லது சரியாக பந்தை தடுக்கவில்லை எனில் எல்பி ஆவார்கள். ஆனால், அதிர்ஷ்டக் காற்று என்னவோ, இங்கிலாந்து பக்கம் தான் வீசுகிறது.

3வது நாளின் முதல் செஷன் 100க்கு பூஜ்யம் என்ற அளவில் இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஒரு பெர்சன்ட் கூட இந்தியா ஆதிக்கம் செலுத்தவில்லை. பும்ரா, ஷமி, இஷாந்த், சிராஜ், ஜடேஜா என ஐந்து பவுலர்களும் மாற்றி மாற்றி 2 மணி நேரத்தில்.. அதாவது போட்டி தொடங்கி, உணவு இடைவேளை வரையிலான 2 மணி நேரத்தில் வீசிவிட்டார்கள். 
இதில், சிராஜ், பும்ரா, ஜடேஜா ஓவர்களில் விக்கெட்டுகள் கிடைப்பது போன்று தெரியும். ஆனால் கிடைக்காது. இப்படித்தான் நிலைமை இருந்தது. குறிப்பாக ஜானி பேர்ஸ்டோ இன்று ,மலை போல் நின்று விட்டார். அவர் இவ்வளவு கான்ஃபிடன்ஸுடன் இருந்ததற்கு காரணம், சிராஜ் என்றால் அது சத்தியமாக மிகையாகாது.

நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், பேர்ஸ்டோ விக்கெட்டை கைப்பற்றிவிட்டு, அவர் முன்பு சென்று "வாயை மூடிக் கொண்டு போ" என்பது சிராஜ் சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை செய்தார். 

அதன் விளைவு, இன்று இந்தியாவை ஏகத்துக்கும் வைத்து சோதித்து வருகிறார் பேர்ஸ்டோ. மறுபக்கம், உணவு இடைவேளை வரை 89 ரன்கள் அடித்து கல்லு மாதிரி, இரும்பு மாதிரி நின்றுக் கொண்டிருக்கிறார் ஜோ ரூட். அடுத்த சதத்துக்கும் ரெடியாகிவிட்டார். 

ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமெனில், இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின் முதல் செஷனில், மிதமான வெயில் இருந்தது. காற்று பெரிதாக இல்லை. பந்தில் ஸ்விங் இல்லை. ஒரு அட்டகாசமான பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற களம் எனலாம். இதுபோன்ற ஒரு சூழல், புஜாராவுக்கு கிடைத்திருந்தால், தனது மோசமான ஃபார்மில் இருந்து நிச்சயம் மீண்டும் வந்திருப்பார்.

தொடர்ந்து ஆடிய ஜோ ரூட் - பேர்ஸ்டோ ஜோடி, இந்திய பவுலர்களுக்கு தலைவலி கொடுத்து வந்தனர். நீண்ட நேரமாக நீடித்து வந்த இந்த பார்ட்னர்ஷிப்பை இளம் வீரர் முகமது சிராஜே பிரித்து வைத்தார். 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், முதல் போட்டியில் சண்டை வளர்த்துக்கொண்ட பேர்ஸ்டோவின் விக்கெட்டையே சிராஜ் எடுத்தது தான். நீண்ட நேரமாக ஒரே லென்ந்தில் முயற்சித்து வந்த சிராஜ் இந்த முறை ரவுண்ட் தி விக்கெட் திசையில் இருந்து திடீரென ஷார்ட் லென்ந்த் போட்டு அதிர்ச்சிக் கொடுத்தார். 

இதனை எதிர்பார்க்காத பேர்ஸ்டோவின் க்ளௌவ்ஸில் பட்டு முதல் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. புதிய ட்யூக் பந்து என்பதால் அதனை பேர்ஸ்டோவால் சரியாக கணிக்கமுடியவில்லை.

ஆனால் மறுமுணையிலோ எதனைப்பற்றியும் கண்டுக்கொள்ளாமல் தனது ரன் வேட்டையை தொடர்ந்து செயல்படுத்தி வந்தார் ஜோ ரூட். இதனால் சட்டென முடிவெடுத்த கோலி, இனி ரூட்டின் விக்கெட்டில் கவனம் செலுத்த தேவையில்லை என்பது போல் நினைத்துவிட்டார் போல. 

அவர் கொண்டு வந்த பவுலிங் திட்டம் அனைத்து ரூட்டை விட்டுவிட்டு மறுமுணையில் இருக்கும் வீரர்களுக்கானதாக இருந்தது. அதற்கு நல்லப் பலனும் கிடைத்தது.

பந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் ஸ்விங் அதிகரிக்க தொடங்கியதால், மாறி மாறி சிராஜ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருக்கே பந்துவீச அழைப்பு வந்துக்கொண்டிருந்தது. ஏனென்றால் அடுத்து களமிறங்கிய வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் மொயின் அலி ஆகும். 

இவர்கள் இருவரையும் நிற்க விடக்கூடாது என்பதால், அனுபவ வீரரான இஷாந்த் சர்மாவும், யாருக்கும் பெரிய அளவில் தெரியாத சிராஜும் கொண்டு வரப்பட்டனர். இதன் பலனாக அனுபவ வீரரான இஷாந்த் சர்மா பட்லரின் விக்கெட்டையும், மொயின் அலி, சாம் கரண் என வரிசையாக விக்கெட்களை சாய்த்தார். அதிலும் குறிப்பாக ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் மொயின் அலியையும், சாம் கரணையும் வீழ்த்தினார்.

விராட் கோலி போட்ட திட்டப்படியே மறுமுணையில் இருந்த வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர். டெயில் எண்டர்ஸான ஒல்லி ராபின்சன், மார்க் வுட், ஆண்டர்சன் ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணில் நிற்க முடியாமல் வெளியேறினர். 

இதனால் இறுதியில் இங்கிலாந்து அணி 391 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸில் இது 27 ரன்கள் முன்னிலை ஆகும். மறுமுணையில் யாராலும் அசைக்க முடியாமல் இருந்த ஜோ ரூட் 180 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார். விராட் கோலி முதலில் ஜோ ரூட்டின் விக்கெட்டை எடுக்க வேண்டும் என முயற்சிகள் தோல்வியடைந்தாலும், திட்டத்தை உடனடியாக மாற்றியது, இந்தியாவின் வெற்றி வாய்ப்பினை இன்னும் பிரகாசமாகவே வைத்துள்ளது.