கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. இலங்கை டூருக்கும் 'ஆப்பு'?

அதுமட்டுமின்றி, வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளும் கடுமையாக்கப்படலாம் என்று தெரிகிறது. (ஏற்கனவே பயோ-பபுள்-ங்கிற பேருல வெந்து அவிஞ்சு போய் தான் இருக்காங்க!).

கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. இலங்கை டூருக்கும் 'ஆப்பு'?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 

அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆக., 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. 

இந்த நீண்ட நெடிய டூருக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

அதேசமயம், இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சென்று 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்தார். அதாவது, இந்திய 'பி'டீம் இலங்கைக்கு செல்லும் என்று தெரிவித்தார். 

இதில், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட எந்த முன்னணி வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள். அங்கு செல்லவுள்ள இரண்டே இரண்டு சீனியர் வீரர்கள் ஷிகர் தவானும், ஹர்திக் பாண்ட்யாவும் தான். இவர்கள் இருவரும் இங்கிலாந்து தொடரில் இடம் பெறாதவர்கள். இப்படி 99 சதவிகிதம் அனுபவ வீரர்கள் இல்லாத இளம் இந்திய அணியை இறக்கும் பிசிசிஐ, அங்கு மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது.

ஒருபக்கம், இலங்கை செல்லும் அணிக்கு கேப்டன் ஷிகர் தவானா, ஹர்திக் பாண்ட்யாவா என்ற பஞ்சாயத்து சென்றுக் கொண்டிருக்க, மறுபக்கம் இலங்கை தீவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவது, இரு அணி நிர்வாகங்களையும் கலங்கச் செய்துள்ளது. 
முன்னதாக, கொழும்பு நகரில் உள்ள பிரேமதாச ஸ்டேடியத்திலேயே மொத்தமுள்ள 6 போட்டிகளையும் நடத்தி முடிப்பது என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது வைரஸ் தொற்று தீவிரமாவதால் மறுபரிசீலனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளும் கடுமையாக்கப்படலாம் என்று தெரிகிறது. (ஏற்கனவே பயோ-பபுள்-ங்கிற பேருல வெந்து அவிஞ்சு போய் தான் இருக்காங்க!).

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் அர்ஜுன டி சில்வா, "இதுவரை கொழும்புவில் போட்டிகளை நடத்துவது என்ற நிலையில் தான் உள்ளோம். ஆனால், அப்போது உள்ள நிலைமையைப் பொறுத்தே முடிவு அமையும். கொரோனா அதிகம் பரவுவதால், ரசிகர்கள் போட்டியை நேரில் காண அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்றார். 

ஏற்கனவே, இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட, இப்போது இலங்கை தொடருக்கும் சிக்கல் எழுந்துள்ளது. இந்திய மெயின் அணி அடுத்து இங்கிலாந்து பயணத்துக்கு தயாராகி வருகிறது. அதேசமயம், பிசிசிஐ கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடியா இருக்கு.. இங்கிலாந்திலாவது எந்த பிரச்சனையும் ஏற்படாமல் நீ தான் பார்த்துக்கணும் கடவுளே!

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0