டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி

டிவில்லியர்ஸ் அதிரடி காட்ட, விராட் கோலி 33 ரன்களும், மேக்ஸ்வெல் 39 ரன்களும் அடிக்க பெங்களூரு அணி முதல் வெற்றியை ருசித்தது.

டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி

ஐபிஎல் 2021 சீசனின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா 19 ரன்னில் ரன் அவுட்டானார். சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

கிறிஸ்லின் 35 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னும், இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் அடித்தது. பெங்களூரு அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.

இதையடுத்து,160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர், விராட் கோலி இறங்கினர்.

சுந்தர் 10 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய படிதார் 8 ரன்னில் ஏமாற்றினார். தொடர்ந்து இறங்கிய அனுபவ வீரர் மேக்ஸ்வெல்லும், விராட் கோலியும் 52 ரன்கள் ஜோடி சேர்த்தனர்.

அணியின் எண்ணிக்கை 98 ஆக இருக்கும்போது விராட் கோலி 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் மேக்ஸ்வெல் 39 ரன்னில் வெளியேறினார்.  

தொடர்ந்து இறங்கிய டி வில்லியர்ஸ் முதலில் நிதானமாக ஆடினார். அதன்பின் அதிரடி காட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0